Friday, December 26, 2008
அப்பா..!!!
சிறுவர்கள் சொல்லும் பேய்க்கதைகள் கேட்டு..
விடியாத இரவுகள் எப்போது போகும் என அழுது
விடிந்த உடன் _ கொல்லைக்கு செல்ல
துணைக்கு நீ வரவேண்டும்...!!! வருவாயே அப்பா..!!!
பள்ளி நாட்களில் யாரேனும் என்னை அடித்தாலோ
இல்லை நான் யாரையாவது அடித்தாலோ
அந்த இடத்தில் எனக்காக ஆஜானுபாகுவாய்
நீ வேண்டும்...!!! வருவாயே அப்பா...!!!
வகுப்பின் இடைவேளைகளில் வாசலில்
விற்கும் துண்டு மாங்காய்,அவித்த நெல்லிக்காய்
சிவந்த மண் சவ்வு மிட்டாய் வெள்ளரிக்காய் _ வாங்கி
நானும் என் தோழிகளும் கூட்டமாக மகிழ்ந்து
சிரித்து பேசி சாப்பிட _ காசு தருவதற்கு
நீ வேண்டும்...!!! தருவாயே அப்பா...!!!
வருட முடிவில் விடுமுறை நாட்களில்
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள
"திக்திக்" துடிப்புகளுடன் பயந்து கொண்டே
பள்ளிக்குசெல்லும் பொழுதுகளில் _ எனக்காக
என்முன் வந்து அறிவிக்க நீ வேண்டும் என்று
நினைத்த வேளைகளில் நிஜமாகவே வருவாயே ... அப்பா..!!!
கல்லூரிக்கு போகிறாய்_கையில்
காசு நிறைய இருக்கட்டும்
என்று நான் எதிர்பாராத தருணங்களில்
என்னை திகைப்பில் ஆழ்த்த
நீ வேண்டும் _ செய்தாயே அப்பா...!!!
நான் கைவீசி சாலைகளில்
நடந்ததை விட
உன் கைப்பிடித்தே நடந்தது அதிகம்...!!!
இப்படி
நீ எனக்கு கொடுத்த பாசங்களையும்
நீ உரைத்த சந்தோஷங்களையும்
உனக்கு பிடித்த கல்வியையும் கொண்டு
உலகை ஜெயிப்பேன் _ உன் காலடியில் வைக்க என்று
உன்னை பிரிந்த நாள் முதலாய்...
நீயே என் அறிவாகவும்
நீயே என் ஆற்றலாகவும்
நீயே என் குருவாகவும் _ கொண்டு
இன்று நீ நினைத்த எண்ணங்களையெல்லாம்
செயலாக்கி உன்னை தேடி வருகிறேனே ...அப்பா...!!!
எங்கே போனாய் நீ????
"இறப்பு என்பது இழப்பு அல்ல..!!!
நீ கொண்ட மனத்தினால் _ நித்தம்
ஒருவரை அன்பினால் பாராட்டும்
மனிதருக்கு இறப்பு என்பது இல்லை...
அதனால்
இழப்பு என்பதும் இல்லை" _ இது
நீ எனக்கு சொன்ன மேற்க்கோள்...!!!
ஆனாலும் இதில் உன்னை வைத்து
பார்க்க ஏனோ மனம் சிக்கி..
சிதறி சிதைந்து போகிறது...!!!
எங்கு மறைந்து போனாய்...?
ஏன் இறந்து போனாய்...???
உன் பிம்பமாய் நான் மட்டும்
அலைகிறேன் _ உன் மகளாய்...!!!!
Wednesday, December 24, 2008
கனவுகள் விற்பனைக்கு...!!!
கண்களை மூடி கனவினை தேடும்
முகங்களுக்கிடையே
என் மனதினை திறந்து யுகங்களை
காண விழையும் இந்த
கனவுகள் விற்பனைக்கு...!!!
யார் வேண்டுமானாலும் வரலாம்
எது வேண்டுமானாலும் வரலாம்..
விதி விலக்குகள் இல்லை
மனக்குதிரை ஓடும் வரை ஆட்டம்..!!!
எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட
கனவுகள் விற்பனைக்கு...!!!
நான் யாரோவாக...யாரோ நானாக
மாற்றி போடும் காலங்கள்..மீண்டும் _ அந்த
யாரோ இன்னொருவராக.. அவர்களின்
எல்லைக்குள் நானாகி திளைக்கின்ற கண்ணாமூச்சி
கனவுகள் விற்பனைக்கு...!!!
சில கனவுகள் திரைகளில் இருந்து களவாடப்பட்டு
நான் கண்ட சிலவற்றைகள் திரைகளுக்குள்ளே
களவாய் போய் பிறகு காணாமலே கலைகின்ற
கனவுகள் விற்பனைக்கு...!!!
இதை படிக்கும் இந்த நொடி உங்களுக்குள்
உதிக்கும் ஏதோ அர்த்தமற்ற கனவுகளும்
ஆர்ப்பரிக்கும் நினைவுகளும் விற்பனைக்கே உரித்தாகுகிறது!!!
எடுத்து கொண்டாடும் உரிமையாளர்
உங்களில் யாரோ ஒருவராய் இருக்கலாம்...
இல்லை ஏதும் இல்லாததாய் இருக்கலாம்...!!!
Friday, December 12, 2008
மிருகம் நான்...கடவுள் நீங்கள்..!!!
எரிகின்ற கொள்ளியில்
கரைகின்ற எண்ணை போல்
சூழ்நிலைகள் என்னுள் எரிந்து
தரையில் உதிரும் சாம்பலாய்
தகர்ந்து கொண்டிருக்கிறது_என் தனிமை!!!
நான் நானும் அல்ல... வேறு யாரும் அல்ல
நிர்வாணமே இங்கு நிரந்தரம்
புரியவில்லை _ அரிதாரங்கள்
பூசும் மனங்களுக்கு
கலைந்த வேஷங்களும்
கலைந்த பின் அடுத்து நடக்கும் ஒப்பனைகளும்
கணப்பொழுதில் கண்முன்னே
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...!!!
இவையனைத்தையும் வீறுகொண்டு
விளக்கமாயுரைக்க _ இயம்பவில்லை
என் நாக்கு..!!!
போனால் போகட்டும்
மனங்கெட்ட மானுடர்கள்..!!
பாழாய் போன சடங்குகளும்
பழகி புளித்த சாஸ்திரங்களும் _ அணிந்து கொள்ள
என்ன தான் ஆசையோ இவர்களுக்கு
எடுத்து சொன்னால்
மிருகம் நான்...கடவுள் நீங்கள்..!!!
சத்தங்கள் சூழ்ந்து சச்சரவுகள் மிகுந்து
வெறும் பிண்டங்கள் ஆளும் நாட்டு வாழ்க்கையின்
கடவுளாய் இருப்பதை விட_இருள் மட்டுமே புரளும்
காட்டு வாழ்க்கையில் ஒரு
மிருகமாய் அலைவதே மேல்....!!!!!
நான்...!!!!
காண்போரை கவர்ந்திழுக்க
வழிந்தோடும் வெண்மை தான்
நிலவுக்கு அழகு என்றாலும் _கண்டவுடன்
தெறித்து ஓடி அதனுள் படர்ந்திருக்கும்
சிறு கருமை போல எங்கும் எப்போதும்
தனித்து இருக்கவே விரும்புகிறேன்
நான்...!!!!
எங்கே அந்த சுதந்திர தினம் ???!!!!
அதுவும் ரெட்டையா என்று கேட்டு
பக்கத்துவீட்டு பாட்டி ஆரம்பித்து வைத்த
என் பிறந்த தினம்...!!!!
"பொறந்தவுடனேயே
பெத்தவளை முழுங்கிடுச்சு
இன்னும் யாரை முழுங்க போகுதோ"
என்று எதிர்தாத்து மாமி பயந்து
நான் வளர்ந்த தினங்கள்...!!!
வெண்ணை வைக்கா விட்டாலும்
சுண்ணாம்பு வைக்க தவறாத
சித்தியின் கொடுமை தினங்கள்...!!!
"உன் நன்மைக்காக நினைத்து
இப்படி பண்ணிடேனம்மா" என்ற
அப்பாவின் புலம்பல் தினங்கள்..!!!
பெரியவளாயிட்ட இனி எதற்கு படிப்பு
பேசாம வீட்டை பார்த்துக்கோ
என்று குழந்தைகளுக்கு ஆயாவாகிய
என் இளமை மிகுந்த
கொடுமையான தினங்கள்...!!!
சாலையில் நடக்கும் போது
சிறுவன் முதல் கிழவன் வரை
கழுகு பார்வை பார்த்து
என்னுள் குறுகி சுருங்கவைத்த
நத்தைகூட்டு தினங்கள்...!!!
நான் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் மேல் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் வாழ்க்கை இந்த பாழாய் போன
கல்யாண சந்தையில் விற்கப்பட்ட தினங்கள்..!!!
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளும்
என் சம்மதமின்றி
நான் கலைக்கப்பட்ட கருப்பு தினங்கள்..!!!
பெண்தான் வேண்டும் என்று தவமிருக்கையில்
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான
அவல தினங்கள்..!!!
கணவனை இழந்த பின்னர்,
குழந்தைகளுக்காகவே வாழ்ந்து
ஓடாய் தேய்ந்து வீழ்ந்த தினங்கள்..!!!
முதுமையின் வெம்மையில்
பிள்ளைகளின் நிழலில் வாழ நினைக்கையில்
முதியோர் இல்லமே என் இடம் என
அவர்கள் தீர்மானித்த அவமான தினங்கள்..!!!
தனிமையை தேடி..ஓடி..நாடி..
களைத்து உயிர்விட்ட
என் வாழ்வின் இறந்த தினங்கள்..!!!
ஆமாம்............
இவற்றில் எங்கே வருகிறது
என்னுடைய
"அந்த சுதந்திர தினம்?!!!!"
Sunday, November 30, 2008
என் நிகழ்காலம்!!!
ஓங்கி உயரமாய் வளர்ந்திருக்கின்ற மரங்கள்...
நம் பிரிவிற்கு சாட்சியாய் மெளனி சாய்கின்றன...!!
எப்போதும் இருப்பேன் உன்னுடன் என்று
எதிர்ப்பது யாராக இருந்தாலும் தவிர்த்து _ உன்னை
தாங்க வரும் வேளையில்
எங்கே(கோ) போனாயே நீ!!!
இழந்ததெல்லாம் போதும்
இனி என்ன மிஞ்சியிருக்கிறது
எஞ்சி கிடக்கின்ற எச்சில் வாழ்க்கையில்_
எங்கோ எதற்காகவோ எப்பொழுதோ
எனக்கு கிடைத்த _ உன் நினைவுகளே
சுவடுகளாய் படர்ந்து நீ...ண்டு வருகிறது...!!!
நீ இல்லாத என் நிகழ்காலம்!!!
Monday, November 10, 2008
இரவுகள் ரகசியமானவை
வேடங்கள் பல அணியும் _ வேதனை
முகமூடி வாழ்க்கையில்
வெளிப்படையான
போதை போல் என்னை
விரும்ப வைக்கும் இந்த கார்கால
நீண்...ட இரவுகள்
என்றும் மிக ரகசியமானவை !!!
தவளைகளின் ரீங்காரம்
மழைத்துளியின் சலசலப்பு
ஜன்னலை விரிக்கையில்
உள்ளமும் உறைய வைக்கும்
இந்த காற்று...
குளிர்கால இரவுகளுக்காகவே
பகலெல்லாம் எதிர்பார்த்து
காத்திருக்க வைக்கும்
என் தனியான இரவுகள்
என்றும் ரகசியமானவை!!!
சிலிர்க்க வைக்கும்
நினைவுகளுடனும்
வரப்போகும் நிகழ்வுகளுக்கான
கனவுகளுடனும்...
எல்லையில்லா பிரபஞ்சத்தில்
நான் மட்டும் ஒருத்தியாய்
மகிழ்வுடன் ஆர்பரித்து அலற
வைக்கும் _ இந்த
இரவுகள் என்றும் ரகசியமானவை!!!
என் சுயநலத்தின் பெருவாரியான
வெளிப்பாடுகளில் இருந்து வீறு கொண்டு
அடைக்கப்பட்ட வில்லில்
ஆவேசமாய் கிளம்பும்
அம்புகள் போல்
வெளியேற
காத்திருக்கும்
தவிப்புகள் மிகுந்த _ இந்த
நீண்...ட இரவுகள்
என்னுள் என்றுமே
மிக மிக ரகசியமானவை...!!!!
Thursday, November 6, 2008
மது அருந்துவதும்,புகை பிடிப்பதும்....
அம்மாவை ஆசையாய் சினிமாவிற்கு கூட்டி போக...
கேட்ட உடனே எனக்கு அதிர்ச்சி இல்லை...மாறாக ஆச்சரியம் தான் முதலில்...!!!ஏங்க பொண்ணுங்க மது அருந்தகூடாது,புகை பிடிக்ககூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? ஏன் பொண்ணுங்க'ன்னா இவ்வளவு சட்ட திட்டமெல்லாம் பேசறாங்கன்னு புரியலை..பசங்க மட்டும் கஷ்டம் வந்தா மது அருந்துவதும் ..இல்ல வார இறுதியில்(weekend) சும்மா ஒரு ஜாலிக்காக(இதைபத்தி நிறைய யோசிச்சு இருக்கேங்க..) சேர்ந்து தண்ணி அடிக்கறது'ன்னு எல்லாம் பண்றாங்க .. அது மாதிரி நாமும் பண்ணா என்ன தப்பு??என்னை யோசிக்க வைத்தது அந்த கேள்வி...!!!
நான் பதிலுக்கு,"ஏங்க,நம்ம மனுஷ வாழ்க்கையில் Body Rthythm and Mind Rhythm'னு இரண்டு வகை இருக்கு.இந்த இரண்டும் சரியான அளவு இல்லைன்னா,அதாவது நம்ம mind rhythm and body rhythm சரியான நிலையில் இல்லாமல் போனாலோ அல்லது ஏதேனும் ஒன்று அதிகமாய் போனாலோ..நாம் சில செயல்களை தேடி நாடி போகிறோம்... அது எனக்கு வயலின் இசைக்கிறதும் ,பாட்டு கேட்பதும் இல்லை கவிதை எழுதுவதும்,தனியாக இருட்டில் சிறிது நேரம் தனித்து நிற்பதும்..குழந்தையின் சிரிப்பும்" ஆகிறது.நாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு சுழ்நிலையில் வளர்கிறோம்,அப்படி வளரும் நிலைகளில் நமக்குள் நெருங்(க்)கி நம்மை பாதிக்கும் நிகழ்வுகளில் மனம் மாறி போய்விடுகிறது.. ஒருவேளை என் கூட இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து மது அருந்தும் போது நானும் போவேனோ? ஒரு எண்ணம் ஒரு வரியாய் மனதுள் அலைந்தது...!!!பேசிக்கொண்டே சென்றோம்..என் நண்பரின் manager எங்களை பார்த்துக்கொண்டே போனார்.. வெறுப்பாக இருந்தது.
இவ்வாறு,விவாதங்களும் வினாக்களும் முற்று பெறாமலே,எங்கள் இடம் வந்ததும் வெட்டப்பட்ட வாழைமரங்கள் போல் பேசியதையே மறந்து,சிரித்து வைத்து(முகமூடி).. bye சொல்லி ...வேலையில் மூழ்கினேன்.....!!!!!
தொல்லைபேசி அழைத்தது..வீட்டில் இருந்து அழைப்பு.என் தங்கை மிரட்டும் தொனியில் "எங்க இருக்க ?" இந்த கேள்வி என்னை மிகவும் பாதித்த கேள்வி.நான் "வேறு எங்க அலுவலகத்தில் தான்"..அவள் "எப்ப வருவே"(என்னடா இது..ச்சே..) இந்த ஏன்,எதற்கு,எப்போது என்று வேலையில் தான் அம்புகள் என்றால் வீட்டிலுமா?.."வருவேன்னா வருவேன்..வீட்டுக்கு தான் வருவேன்" ஏன் எனக்கு இந்த வெறுப்புன்னே தெரியலை.. அது என்னை அந்த இரவு முழுவதும் வாட்டி வதைத்த வேளையில் ..
Tuesday, November 4, 2008
நாம்
இல்லையோ _ எனக்கு தெரியாது...
ஆனால் மென்மைக்கும் சிறிது
பெண்மை உண்டு
என்று நாம் பேசி செல்லும்
போது உணர்ந்திருக்கிறேன்...
Monday, October 20, 2008
தனிமை
மழை காலங்களில்
இரவு நேரங்களில் விட்டு விட்டு போகும்
மின்சாரம் போல
வாழ்க்கையும் சில சமயங்களில்
பிடிக்காமலே கழிகிறது...!!!
இருளே வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே இருளாகவும்
வாழும் எனக்கு _ இந்த தனிமை
ஒரு வரப்பிரசாதமாகவே இருந்திருக்கிறது..!!
கலந்து போகும் மனிதர்களும்
கலைந்து போகும் மனங்களும்
நிறைந்து எங்கும் பிம்பங்களே
சூழ்ந்த இந்த மனிதர்கள் வாழும்
மயானத்தின் கொள்ளியாக
ஒளிரும் _ இந்த தனிமை
என் விடுதலையாகவே இருந்திருக்கிறது!!!
வெறுமையின் இடங்களை நிரப்பவும்
அலை போல் சூழும் மனிதர்களிடையே
சிறு படகு போல் தனியே என்னை
பயணிக்க வைக்கும் __ இந்த தனிமை
என்றும் என் விருப்பமாகவே இருந்திருக்கிறது..!!!
தனிமையே இனிமையாகவும்
இனிமையே தனிமையாகவும்
தாகங்கள் நிரம்பிய இவ்வேட்கை
உலகினில் தீரா நதி போல்
என்னை சுற்றி வளைக்கும் __ இந்த தனிமையே
இன்று என் துணையாகவும் விரிந்திருக்கிறது...!!!!
Sunday, September 7, 2008
இவள் யாரோ ??!!
முதல் காதல்
Tuesday, March 4, 2008
உன்னை காண்பதற்கு முன்..
மாறாக ஒவ்வொரு முறையும்
உனக்கு என்னிடம் _ என்ன வேண்டும்
இறைவா என நினைத்திருக்கிறேன்
உன்னை காண்பதற்கு முன்பு...!!!
நீ மட்டும்
எங்கேயும் பேதம் - பார்ப்பதில்லை
பரவலாகவே பொழிகிறது!
நீயும் அப்படித்தான் உன்னை
நினைத்தால் _ யாரும்
எனக்கு தெரிவதில்லை...
நீ மட்டும் தான்...!!!
Thursday, February 21, 2008
நாகரீகம்
பாய்ந்து ஓடும் _ வெளிச்சங்கள் படர
அரவமற்ற சாலையில் வாகனங்களை தவிர
வேறெதுவும் காணமுடியவில்லை!
வீட்டிற்கு செல்லும் பாதையில்
ஒரு மயான காடும் இருக்கின்றது
காற்றை படித்தவாறு _ கண்ணிமைக்கும்
நேரங்களில் அதை கடக்கும் வேளைகளில்
நானும் நினைத்திருக்கிறேன் _ ஒருநாள்
என் இடம் இதுவாக கூடும் என்று!
தூரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசை
என்னை யோசிக்க வைதிருக்கிறது _ ஒருவேளை
எல்லோரும் கடவுள் தானோ ..!
அடர்ந்த காட்டின் மேல்
உறைந்த கருமையில் _ பரவும்
வெயில் போல...
இந்த நாகரீக வாழ்கை
என் நிஜங்களை களைந்து
நிழல்களை மட்டுமே உலவ விட்டிருக்கிறது!
போலி புன்னகைகள்
புறங்கூறுதல்...
மறைமுக தாக்குதல்களில் _ மிருகங்களே
நம்மை கண்டு மிரளும் நிலை இந்த நாகரீகம்...!
யாருக்கு வேண்டும்?
எதற்கு வேண்டும்?
ஏன் வேண்டும்?
உணர்வுகள் விழித்து கொள்ள
சிறகுகள் முளைத்து பறந்து போகின்றேன்_ மீண்டும்
நம் கற்கால வாழ்கைக்கே...!!!
Wednesday, January 16, 2008
மௌனங்கள்!!
இடைவெளியின்றி விழுந்து கொண்டிருக்கிறது
திடமான மௌனங்கள்!!
எளிதாக தான் இருக்கிறது
வார்த்தைகளை விட
இந்த பாழாய் போன மௌனங்களை பற்றிக்கொள்வது!!
இந்த மௌனம் தான்
எத்தனை கச்சிதமாய் பொருந்துகிறது
எல்லா நேரங்களிலும்
முக்கியமாக விழித்திருக்கும் வேளைகளில்
பெரும்பாலும்
எனக்குள்ளே வசிக்க நேரும்
நானும் என் மௌனங்களும்
சற்று கடுமையாகவே வெளிப்படக்கூடும்
என்றைக்காவது ஒரு நாள்....!!!
Tuesday, January 8, 2008
உன் நினைவுகள்
கால் பதித்திருக்கும் அவஸ்தை
போல் எப்போதும் வாழ்கிறது - உன் நினைவுகள்
எல்லோரிடமும் பேசும் போதும் - அதன்
குறுக்கீடுகள் முன்பை விட அதிகரித்து விட்டன !
என் ரகசிய செய்கைகளிலும்
கோப்பையில் வழியும் கருந்திரவத்தின் கசந்த போதைகளிலும்
என்னை முழுகக நனைத்து
என் சுயநினைவுகளை - உறிஞ்சி கொள்கிறது.
என் அந்தரங்க அறையில் வடிகட்டாத காற்றாக
வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து விடுகிறது!
நள்ளிரவில் - சிலிர்ப்புகள் பூத்து
என்னுடலில் வெறியாட்டம் போடும் அதை
ஒரு வெற்றிடத்தில் வெறியோடு அழுத்தி விட்டு
உறங்குகிறேன் -மறுநாள் காலையில்
என் கனவுகள் எனும் வரவேற்பறையில்
சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது
தொலைத்து விட்டு வந்த - உன் நினைவுகள்