Friday, December 12, 2008

எங்கே அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம் ???!!!!

பிறந்த‌வுட‌ன் பொட்டையா?
அதுவும் ரெட்டையா என்று கேட்டு
ப‌க்க‌த்துவீட்டு பாட்டி ஆர‌ம்பித்து வைத்த‌
என் பிற‌ந்த‌ தின‌ம்...!!!!

"பொற‌ந்த‌வுடனேயே
பெத்த‌வ‌ளை முழுங்கிடுச்சு
இன்னும் யாரை முழுங்க‌ போகுதோ"
என்று எதிர்தாத்து மாமி ப‌ய‌ந்து
நான் வ‌ளர்ந்த‌ தின‌ங்க‌ள்...!!!

வெண்ணை வைக்கா விட்டாலும்
சுண்ணாம்பு வைக்க‌ த‌வ‌றாத‌
சித்தியின் கொடுமை தின‌ங்க‌ள்...!!!

"உன் நன்மைக்காக நினைத்து
இப்படி பண்ணிடேனம்மா" என்ற
அப்பாவின் புல‌ம்ப‌ல் தின‌ங்க‌ள்..!!!

பெரிய‌வ‌ளாயிட்ட‌ இனி எத‌ற்கு ப‌டிப்பு
பேசாம‌ வீட்டை பார்த்துக்கோ
என்று குழ‌ந்தைக‌ளுக்கு ஆயாவாகிய‌
என் இள‌மை மிகுந்த‌
கொடுமையான‌ தின‌ங்க‌ள்...!!!

சாலையில் ந‌ட‌க்கும் போது
சிறுவ‌ன் முத‌ல் கிழ‌வ‌ன் வ‌ரை
க‌ழுகு பார்வை பார்த்து
என்னுள் குறுகி சுருங்க‌வைத்த‌
ந‌த்தைகூட்டு தின‌ங்க‌ள்...!!!

நான் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் மேல் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் வாழ்க்கை இந்த‌ பாழாய் போன‌
க‌ல்யாண‌ ச‌ந்தையில் விற்க‌ப்ப‌ட்ட‌ தின‌ங்க‌ள்..!!!

திரும‌ண‌த்திற்கு பிற‌கு ஒவ்வொரு நாளும்
என் ச‌ம்ம‌த‌மின்றி
நான் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ கருப்பு தின‌ங்க‌ள்..!!!

பெண்தான் வேண்டும் என்று த‌வ‌மிருக்கையில்
இர‌ட்டை ஆண் குழ‌ந்தைக‌ளுக்கு தாயான‌
அவ‌ல‌ தின‌ங்க‌ள்..!!!

க‌ண‌வ‌னை இழ‌ந்த‌ பின்ன‌ர்,
குழ‌ந்தைக‌ளுக்காக‌வே வாழ்ந்து
ஓடாய் தேய்ந்து வீழ்ந்த‌ தின‌ங்க‌ள்..!!!

முதுமையின் வெம்மையில்
பிள்ளைக‌ளின் நிழ‌லில் வாழ‌ நினைக்கையில்
முதியோர் இல்ல‌மே என் இட‌ம் என‌
அவ‌ர்க‌ள் தீர்மானித்த அவமான‌ தின‌ங்க‌ள்..!!!

த‌னிமையை தேடி..ஓடி..நாடி..
க‌ளைத்து உயிர்விட்ட‌
என் வாழ்வின் இற‌ந்த‌ தின‌ங்க‌ள்..!!!
ஆமாம்............
இவ‌ற்றில் எங்கே வ‌ருகிற‌து
என்னுடைய‌
"அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம்?!!!!"

1 comment:

JAGANNATHAN CS said...

இந்த கவிதை கவிதையாக மட்டுமே இருக்க வேண்டுகிறேன் ...................!!!!
ஆணாதிக்கத்தால் பெண்ணின் அவல நிலையையும் பெண்களே பெண்ணடிமைக்கு துணை செய்வதையும் அருமையாகயும் விளக்கியுள்ளீர்கள்.... மிக அருமை....
இதுபோன்றதொரு நிகழ்வு மீண்டும் அல்லது (மற்றொருவருக்கு ) நிகழாதிருக்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்.........

என்றும் அன்புடன்
ஜெகன் .சுசி