Thursday, September 27, 2007

என் தனி உலகம்

*பார்வை எதை தொட்டாலும்

நான் தனியாகிறேன்..

சப்தங்கள் எல்லாம் - என் மீது

தூசியாய் ஒட்டுகின்றன..

* கூட்டத்தில்

நான் அழுக்காகிறேன்..

தனிமை

என் நீராடலாக இருக்கிறது

*இவ்வுலகமெனும்

கடிதமூட்டையில்

உங்களோடு கட்டப்பட்டிருந்தாலும்

என் மீது எழுத பட்ட முகவரி

உங்களுடையவற்றிலிருந்து வித்யாசமானது..

*கடலுக்குள் இருந்தாலும்

மூச்சு வாங்க

வெளியில் வரும்

திமிங்கிலம் நான்...

நான் வாயை மூடிக்கொள்ளும் போது

வாயில்லாதவை எல்லாம்

என்னுடன் பேசுகின்றன..

*நான் கண்ணை மூடிக்கொள்ளும் போது

கண்ணுக்கு புலப்படாதவை

எல்லாம் தெரிகின்றன..

*மௌன கூட்டில் என்னை அடைத்து

கொள்ளும் போதெல்லாம்

எனக்குள் சிறகுகள் முளைக்கின்றன..

*சப்தங்களின் சந்தை

களைந்த பிறகு

நட்சத்திரங்களின் கானத்தை

கேட்க முடிகிறது..

*மொழிகளை தாண்டி

செல்லும் போது

பூக்களின் பாஷை புரிகிறது..

*உள்ளேயா??வெளியிலா??

என்று தெரியாமல்

இங்கும் அங்கும்

உயிர் ஊசலாடும் உலகம் இது..

*இங்கே எதுவும்

என் ஊர் இல்லை...

யாரும் என் உறவினரும் அல்ல..

* எங்கே சூரியனுக்கு

உதயமும் அஸ்தமணமும் இல்லையோ..

எங்கே -

மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ள

புராதன மரம் நிழல் பரப்புகிறதோ..

*எங்கே...

"நான்" என்னும் முடிச்சு

அவிழ்ந்து போகிறதோ

அது தான் என் ஊர்...!!!

1 comment:

JAGANNATHAN CS said...

உங்கள் கவிதைகளில் எதையோ தொலத்துவிட்டு அதை மீண்டும் தேடும் தேடலை உணரமுடிகிறது.....!
அப்படி என்ன தொலைத்தீர்கள்..........................?