அப்பாடா இந்த மாலை நேரத்து காற்று நம்மிடம் பல விஷயங்களை புரிய வைத்து செல்கிறது. பல நாட்களாக என்னுள் அரித்து கொண்டே இருந்த ஒரு எண்ணம் கதை எழுத வேண்டும் என்பது....
உட்கார்ந்தேன்,பேனாவையும் பேப்பரையும்... கூடவே என் மனதையும் கடிவாளம் போட்டு இழுத்து செல்கிறேன்...
எதை பற்றி எழுதுவது...? என்னவென்று எழுதுவது? எவரை பற்றி எழுதுவது?சட்டென்று எல்லோரும் மனதில் வந்து விட்டு போகிறார்கள்.
நினைவை பதித்தவர்கள்,நினைவையே எடுத்து கொண்டவர்கள்.. மறக்க வேண்டும் என்று நினைத்த மனிதர்கள்...
எல்லோரும் ஊர்வலம் போல் வந்து போகிறார்கள்.. என் குழந்தை பருவ நாட்கள் .. தாத்தா உடன் விளையாடிய நாட்கள்..
காவிரி மணல்..களிமண்ணில் செய்த பொம்மைகள்... எல்லாம் வந்து செல்கின்றன.. வீட்டுக்கு எதிரில் காவிரி.. கரையோர அரசமரம்....
வியாழக்கிழமைகள் தோறும் தாத்தா ஆர்வமாய் நோக்கும் கருட பகவான்... எப்பொழுது பார்ப்பார் என்று ஆர்வமாய்,அவசரமாய் பார்க்கும் நான்...
கருட பகவான் வந்து சென்றவுடன்,என்னை கடைக்கு அழைத்து சென்று வாங்கி கொடுக்கும் 2 ஜவ்வு மிட்டாய்களுக்காக நான் பலமுறை கருட பகவானை வேண்டி இருக்கிறேன்...
இன்று நினைத்தாலும் மறையாத குறையாத நிகழ்வுகள் அவை...
மணலின் மேற்புரத்தில் ஒரு குழி தோண்டி அதற்கு கீழாக ஒரு குழி அமைத்து மேற்க்குழியில் போட்ட ஆற்று மணல் சரசரவென்று மேலிருந்து கீழாக வருவதை பார்க்கும் போது கை கொட்டி சிரித்து கொள்வேன்...
என்னவோ பெரிய சாதனை செய்தது போல்...
கூடவே நிறைய குழந்தைகளும் வருவார்கள்... தாத்தாக்களும் வருவார்கள்...
மேமாதங்களில் நீர் இல்லாத காவிரி நதி பார்த்து துள்ளி திரிந்த உற்சாகங்கள்...சொல்லி புரிவதில்லை அக்கண நேரங்கள்...!
பள்ளி தேர்வுகள் ஆரம்பிக்கும் போதே நீர் கொஞ்சம் வற்றி .. தேங்கி நிற்கும்.
வாயில் விரல் வைத்தபடி பார்த்து கொண்டே..தாத்தா கை பற்றி நதியிடம் பேசி கொண்டே சென்று இருக்கிறேன்...
அப்போது T.V,பாட்டு என்று தனியாக எதுவும் கிடையாது..ஒரு ரேடியோ பொட்டி..தாத்தாவுடன் சேர்ந்து ஆகாஷவாணி செய்திகள் கேட்பதில் அலாதியான சுகம்.செய்திகள் என்னவென்று தெரியாத வயது..இருந்தாலும் அதை வாசிக்கும் சரோஜ் நாராயண் சாமியின் குரல் என்னுள் ரீங்காரமிடுகிறது.
சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் என் பொழுது காவிரி கரையில் தான்.
நான் மட்டும் அல்ல, என்னுடன் தோழர்கள், மரங்கள், செடிகள், கொடிகள், காற்று.. காற்றில் அலைகின்ற பட்டங்கள் எல்லாமே எனக்குள் வாழ்பவைகள்..
இவைகளோடு,இவற்றின் நினைவுகளோடு .. இன்று சென்னையில் ஒரு அடுக்குமாடி குடிஇருப்பின் மேல் மாடியில் வான் நோக்கி.. உங்களுடன் என்னை பகிந்து கொள்ளும் நான் அவசர யுகத்தில்,எல்லாமும் தானியங்கி இயந்திரங்களாய் மாற..மாற்றுவிக்க அன்னியர்கள் ஆரம்பித்து வைத்த தொழிற்சாலையில் ஒரு கணிப்பொறி வல்லுனர்..!!!
(தொடரும்)
1 comment:
my dear sister...
woderful stil u remember all these things...
even i want to go back yo our childhood days...
that was our golden age..
how much ever v earn now.. where ever v may be..what position v do work...
we won't get that happiness... thinking bt that itsself gives us happiness
Post a Comment